எண்ணங்களும்! சின்னங்களும்!!
*தேவேந்திர குல சொந்தங்களே!*
எண்ணங்களும்! சின்னங்களும்!!
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில், தனது அடையாளச் சின்னங்களை உருவாக்குகின்றான். தனது உடை, அணிகலன், இல்லம், வாகனம், சிகை அலங்காரம் என அனைத்தையும் , தன்னுடைய எண்ணங்களைப் பிறருக்கு தெரியப்படுத்தும் அடையாளங்களாக இருக்கும் வகையில் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துகின்றான்.
தன் எண்ணங்கள் மேம்படும்போது , தனக்குரிய அடையாளச் சின்னங்களையும் மேம்படுத்திக்கொள்கிறான்.
தனி மனிதர்கள் பலர் இணைந்தது தான் சமூகம். ஒரு சமூகம், தன்னை எப்படிப்பட்டதாக வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறதோ, அதற்கு ஏற்ற சின்னங்களைத்தான் தங்களது அடையாளமாக முன்னிலைப்படுத்துகிறது.
வீரமுள்ள சமூகமாக தங்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் , வீரமிக்க சின்னத்தை உருவாக்குகின்றார்கள்.
ஆன்மீகச் சமூகம் என்ற எண்ணமுள்ளவர்கள் , தங்கள் சின்னத்தை ஆன்மீகம் செறிந்ததாக உருவாக்குகிறார்கள்.
நாட்டுப்பற்றுள்ளவர்கள் என்ற எண்ணம் உள்ளவர்கள் , தங்களது சின்னத்தை நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் அமைத்துக் கொள்கின்றனர்.
இவ்வாறு தங்கள் சமூகத்தின் பெருமையாக எதை முன்னிலைப்படுத்த எண்ணுகிறார்களோ , அதன் வெளிப்பாடாகவே தங்கள் சின்னங்களை மிகவும் கவனமாக உருவாக்குகிறார்கள்.
தேவேந்திர குல வேளாளர் சமூகம் தன் எண்ணங்களுக்கு ஏற்ப சின்னங்களை உருவாக்கி , இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தி வந்தனர்.
19 ம் நூற்றாண்டில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு திராவிடச் சிந்தனையும், அதன் தொடர்பான தீண்டாமைக்கு எதிரான சிந்தனையும் ஊட்டப்பட்டது. அவற்றின் வெளிப்பாடாக தந்தை பெரியாரின் உருவத்தையும், சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் உருவத்தையும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் அடையாளச் சின்னங்களாக பயன்படுத்தி வந்தனர்.
தங்கள் குடியிருப்புப் பகுதிகளில் பெரியார் சிலைகளையும், அம்பேத்கர் சிலைகளையும் அமைத்தனர். தங்களது சுவரொட்டிகள், விளம்பரப்பலகைகள், துண்டறிக்கைகள் என அனைத்திலும் பெரியார் மற்றும் அம்பேத்கர் படங்கள் ஆக்கிரமித்து வந்தன. இந்த தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாள்போன்ற நாட்களை ஊர்த் திருவிழாவை போன்று கொண்டாடி வந்தனர்.
திராவிட எண்ணத்தின் சின்னமாக தந்தை பெரியாரையும், தீண்டாமைக்கு எதிரான எண்ணத்தின் சின்னமாக அண்ணல் அம்பேத்கரையும் தேவேந்திர குல வேளாளர் சமூகம் பயன்படுத்தியதால் , இந்த சமூகத்தின் மீதும், இந்த உலகம் அதே பார்வையைச் செலுத்தியது.
இருபதாம் நூற்றாண்டில்
தேவேந்திர குல வேளாளர் சமூகம் 'ஆன்மீகப் பெருமை அற்ற சமூகம், தீண்டாமைக்கு ஆளான சமூகம்' என்ற இரு அடையாளங்கள் ஒட்டிக்கொண்டன. இவை இரண்டும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் வரலாறாக மாறி வருவதை உணர்ந்த இந்த சமூகம் தங்களது ஆன்மீகப் பாரம்பரியத்தை தேடினர்.
பல கோவில்களில் முதல் மரியாதை பெற்று வருவதுடன், பல அறமடங்கள் அமைத்து உலகிற்கே உணவளித்த சமூகம் என்ற உண்மையை அடைந்தனர். இத்தனை சிறப்பு வாய்ந்த ஆன்மீகப் பாரம்பரியம் கொண்ட தங்கள் சமூகம், எப்படி தீண்டாமைக் சமூகமாக பார்க்கப்படுகிறது என்ற சிந்தனை தேவேந்திர குல வேளாளர்களின் தூக்கத்தைக் கெடுத்தது.
ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு தேவேந்திர குல வேளாளர்கள் தங்கள் சுய அடையாளத்தை அறிந்து கொண்டனர். ஆன்மீகப் பெருமைகளே இந்தச் சமூகத்தின் எண்ணங்களாக மாறி மேலெழும்பியது. அந்த எண்ணத்தின் வெளிப்பாடாக சமூக அடையாளச் சின்னங்களில் மாற்றம் ஏற்பட்டது. பெரியார், அம்பேத்கர் போன்றோரின் உருவங்களைப் பயன்படுத்துவதை தேவேந்திர குல வேளாளர்கள் மிக கவனமாக தவிர்த்து வருகின்றனர்.
பெரியார், அம்பேத்கர் போன்றோர் மாபெரும் தலைவர்கள் என்பதில் மாறுபட்ட கருத்துகள் தங்களுக்கு கிடையாது என்றும், ஆனால் இவர்களை தங்கள் சமூகத்தின் அடையாளச் சின்னங்களாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சமூக வலைதளங்களில் உரையாடுவதை பரவலாகக் காணமுடிகிறது.
பெரியார், அம்பேத்கர் உருவங்கள் ஆக்கிரமித்து வந்த இடங்களில் தற்போது 'தேவேந்திரன்' உருவம் இடம்பிடித்து வருகிறது.
ஒரு கையில் செங்கோலையும், மறுகையில் வஜ்ராயுதத்தையும் , பிடித்தவாறு வெள்ளை யானையின் மீது கம்பீரமாக அமர்ந்திருக்கும் 'தேவேந்திரனை' , தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் அடையாளச் சின்னமாக பயன்படுத்தி வருகின்றார்கள்.
ஒரு சமூகத்தின் எண்ணத்தில் ஏற்பட்டுள்ள இத்தகைய மாற்றம் உலக மனித வரலாற்றில் இடம் பெறக்கூடிய மிக முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
உலகிலுள்ள பல இனங்களின் வரலாற்றைப் படித்துவரும் இந்த உலகம், இனி தேவேந்திர குல வேளாளர் இனத்தின் வரலாற்றையும் படிக்கக் காத்திருக்கின்றனர்.
'தேவேந்திரன்' என்ற சின்னத்தை பயன்படுத்துவதன் மூலம், தேவேந்திர குல வேளாளர்கள் இந்த உலகத்திற்கு சில எண்ணங்களை பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் .
அவற்றில் சில....
* மருத நிலத்தின் தலைவன் வேந்தன். வேந்தன் தெய்வமாக வழிபடப்பட்டதால் தெய்வ வேந்தன் ஆகி வழக்கில் 'தேவேந்திரனாக' அழைக்கப்படுகிறார். இதன் மூலம் தாங்கள் சேர், சோழ, பாண்டிய வேந்தர்களின் வழி வந்தவர்கள் என்பதை பிரகடனப்படுத்துகிறார்கள்.
* மருத நிலத்து தலைமைச் சமூகம் என்பதன் மூலம் தாங்கள் 'விவசாயப் பெருங்குடி மக்கள்' என்பதைப் பிரகடனம் செய்கின்றனர்.
* 'தேவேந்திரன்' சின்னத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தாங்கள் 'ஆன்மீகப் பெருமை' மிகுந்த சமூகம் என்பதைப் பிரகடனம் செய்கின்றனர்.
* தங்களது ஆன்மீகப் பாரம்பரியத்தின் அடையாளமான 'தேவேந்திரனை' பயன்படுத்துவதால் , தாங்கள் தீண்டாமைச் சமூகம் இல்லை என்பதை பிரகடனப்படுத்தி வருகின்றனர்.
தேவேந்திரன் சின்னத்தை , தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் அடையாளமாகப் பயன்படுத்தத் தொடங்கியதிலிருந்து,
'தனக்குள்ளே ஒருவனாகவும், வெளியே வேறு ஒருவனாகவும் வாழும்' இரட்டை வேட வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
இனிமேல்தான் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் உண்மையான ஆளுமை வளர்ந்து வெளிப்பட்டு , உலகிற்கு பயன்படும். இதுவே இந்தச் சமூகத்தின் சுயத்தை உலகிற்கு வெளிப்படுத்துவதாக அமையும்.
*நன்றி: தேவேந்திரர் மலர். ஜூலை 2017.*
Comments
Post a Comment